search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறைவாழ்வு பயிற்சி"

    ஊட்டியில் போலீசாரின் மனஅழுத்தத்தை குறைக்க நிறைவாழ்வு பயிற்சி தொடங்கியது. இதனை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
    ஊட்டி:

    தமிழ்நாடு காவல்துறை சார்பில் பணியின் போது போலீசாருக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு ஆலோசனை மற்றும் நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் முதல் கட்டமாக போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 40 போலீசாருக்கு மனஅழுத்தத்தை குறைப்பதற்கான நிறைவாழ்வு பயிற்சி தொடக்க நிகழ்ச்சி ஊட்டி ஜெ.எஸ்.எஸ். கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள், போலீசார் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முழு முயற்சிகளை எடுக்கும் போது, அவர்களுக்கு குடும்பம் மற்றும் அதை சார்ந்த சில நேரங்களில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இந்த மனஅழுத்தத்தை குறைக்க நாட்டிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் அதிகாரிகள், போலீசாருக்கு வேலைப்பளு, பாதுகாப்பு பணியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக சரியான முறையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும். இதனால் இதுபோன்ற பயிற்சி அவசியமானது ஆகும்.

    போலீசாருக்கான மருத்துவ முகாம், அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் நடத்தப்படும் போது, முழு அளவில் முகாமில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. மது பழக்கம் உள்ள போலீசார், அதில் இருந்து வெளியே வராத நிலைமையும் இருக்கிறது. தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது தான் அதில் இருந்து விடுபட முடியும். மனதில் எதிர்பார்ப்பும், உண்மையும் கிடைக்காமல் இருக்கும் போது மனஅழுத்தம் ஏற்படும்.

    மாநகர காவல்துறைகளில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்ற பலர் மன அழுத்தத்தில் இருந்தும், உடல் பெலவீனத்தில் இருந்தும் விடுபட்டு உள்ளனர். இதுபோன்ற மனஅழுத்தத்தில் இருந்து விடுபடக்கூடிய பயிற்சிகள், ஆலோசனைகள், சிந்தனைகளை வளர்த்துக்கொண்டால் நம்மாலும் சிறப்பாக பணிபுரிய முடியும். போலீசார் தங்களது குடும்பத்திலும் மகிழ்ச்சியாக வாழலாம். நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையில் அதிகாரிகள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் போலீசாருக்கு மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கிறார்கள். முதல் இரண்டு நாட்கள் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும். 3-வது நாள் அவர்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து எந்த சூழ்நிலையில் பணிபுரிகிறார்கள், வேலைப்பளு குறித்து பயிற்சியுடன் ஆலோசனை வழங்கப்படும். வார இறுதி நாட்களில் தொடர்ந்து ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். நேற்று தொடங்கிய நிறைவாழ்வு பயிற்சி இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, தம்பிதுரை, துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, கல்லூரி முதல்வர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×